என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஸ்டெர்லைட் போராட்டம்"
தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நடந்து ஓராண்டு ஆன நிலையில் இன்னும் மக்கள் மனதில் ஆழமாக பதிந்து போனது அந்த நிகழ்வு. அதற்கு காரணமான ஸ்டெர்லைட் ஆலையின் வருகை மற்றும் செயல்பாடுகள், அதன் விளைவால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள், போராட்டங்கள், போராட்டத்தின் இறுதியாக நிகழ்ந்த துப்பாக்கி சூடு, ஆலை மூடல், மீண்டும் திறக்க முயற்சி என ஒரு பார்வை!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டம் கடந்து வந்த பாதை:
* 1990: ஆண்டின் ஆரம்ப காலகட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலை அமைக்க கோவா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் மறுப்பு.
* 1992: மராட்டிய மாநிலம் ரத்தினகிரியில் ஸ்டெர்லைட்டுக்கு அனுமதி!
* 1993: மராட்டியத்தில் விவசாயிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக ஸ்டெர்லைட் வெளியேற்றப்பட்டது.
* 1.8.1994: தென் தமிழகத்தின் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு அனுமதி!
* 14.10.1996: மாசுக்கட்டுப்பாடு வாரியம் நிபந்தனையுடன் அனுமதி!
* 23.11.1998: ஐகோர்ட்டு ஆணைப்படி ஆலை மூடல் (பிறகு அபராதம் கட்டி ஆலை திறக்கப்பட்டது)
* 29.3.2013: ஆலையை மூட முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவு.
* 31.5.2013: தமிழக அரசின் உத்தரவை தேசிய பசுமை தீர்ப்பாயம் ரத்து செய்து ஆலையை திறக்க அனுமதி.
* 5.2.2018: ஆலையை மூட மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் மனு.
* 12.2.2018: குமாரரெட்டியாபுரத்தில் மக்கள் 100 நாள் போராட்டம் அறிவிப்பு.
* மார்ச் 2018: தூத்துக்குடி முழுவதும் கடை அடைப்பு, போராட்டம்.
* 9.4.2018: மாசு கட்டுப்பாட்டு வாரியம் உரிமத்தை புதுப்பிக்க மறுப்பு.
* 21.5.2018: போராட்டங்களுக்கு தடைவிதித்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு. ஆனால், மக்களுக்கு செய்திகள் சரியாக சென்று சேரவில்லை.
* 22.5.2018: ஏற்கனவே அறிவித்தபடி போராட்டத்தின் 100-வது நாளை குறிக்கும் வண்ணம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட மக்கள் பேரணி. போலீஸ் துப்பாக்கி சூடு, 13 பேர் பலி! 65 பேர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதி.
* 23.5.2018: அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைக்க தமிழக அரசு உத்தரவு.
* செப்டம்பர் 2018: மீண்டும் விசாரணை ஆணையத்தின் காலகட்டம் 6 மாதங்கள் நீட்டிப்பு. அந்த 6 மாதமும் கடந்த நிலையில் இன்று வரை விசாரணை அறிக்கை வெளிவரவில்லை.
* 28.5.2018: ஸ்டெர்லைட் ஆலையை மூடி மாவட்ட கலெக்டர் சீல் வைத்தார்.
* 9.10.2018: வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க சென்னை ஐகோர்ட்டு ஆணை.
* டிசம்பர் 2018: தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆலையை திறக்க அனுமதி.
18.2.2019: தமிழக அரசின் மேல்முறையீட்டில், சுப்ரீம் கோர்ட்டு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை.
மன்னார் வளைகுடாவில் இருந்து 25 கிலோ மீட்டர் தள்ளி தான் ஆலை நிறுவப்பட வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் விதித்த கட்டுப்பாட்டை மீறி 14 கிலோ மீட்டரில் அதுவும் மக்கள் அதிகமாக வாழும் பகுதியில் ஆலை நிறுவப்பட்டது. ஆண்டுக்கு 4 லட்சம் டன் காப்பர் தயாரிக்கும் திறன் கொண்டது ஸ்டெர்லைட் ஆலை.
இதில் ஒரு டன் காப்பர் தயாரிக்கவே 2 கிலோ கந்தக டை ஆக்சைடு வெளியேறுகிறது. இதுவரை மிக பிரமாண்டமாக வெளியேறிய கந்தக டை ஆக்சைடு காரணமாக 82 முறை விஷவாயு கசிந்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விஷவாயு கசிவின் போது மக்களுக்கு கண் எரிச்சல், மயக்கம், மூச்சுத்திணறல், வாந்தி, தலைவலி போன்றவை ஏற்பட்டு உடல்நலன் பாதிக்கப்படுகிறார்கள். ஸ்டெர்லைட் ஆலையால் நிலம், நீர், காற்று மாசுபடுவதாக மக்கள் தொடர்ச்சியாக போராடினர்.
ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளர் அனில் அகர்வால். இது ஒரு பிரிட்டன் நிறுவனம். இது தமிழகத்தில் செய்துள்ள முதலீடு ரூ.336 கோடி. கடைசியாக 2017-ம் ஆண்டில் மட்டும் இந்த ஆலையின் லாபம் ரூ.1,657 கோடி!
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு விவகாரம் ஒரு முக்கிய விவாத பொருளானது. அதன் விளைவு என்ன என்பது மே 23-ல் (நாளை) மக்கள் தீர்ப்பில் தெரியவரும்.
ஸ்டெர்லைட் ஆலை, ஒரு டன் தாமிரத்துக்கு 2 கிலோ கந்தக டை ஆக்சைடு வாயுவை உமிழ்கிறது. இதுவரை, 82 நச்சு வாயு கசிவு சம்பவங்கள் நடந்துள்ளன.
ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டங்களின் 100-வது நாளையொட்டி, கடந்த ஆண்டு மே 22-ந் தேதி போராட்டக்காரர்கள் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர். போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள்.
மக்கள் மனதில் நீங்காத வடுவாக அமைந்த இந்த சம்பவம் நடந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
* 1992- குஜராத், கோவா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஸ்டெர்லைட் ஆலை அமைக்க இடம் தரப்படவில்லை. மராட்டிய மாநிலம் ரத்தினகிரி மாவட்டத்தில் ஆலைக்கு அனுமதி அளிக்கப்பட்டு கட்டுமான பணிகள் நடந்தபோது, பணிகள் நிறுத்தப்பட்டன.
* 1.8.1994- தமிழக அரசு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை தொடங்க அனுமதித்தது.
* 14.10.1996- தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இந்த தொழிற்சாலை இயங்க அனுமதி வழங்கியது.
* 23.11.1998- ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஆலை சிறிது காலம் மூடப்பட்டிருந்தது.
* 23.3.2013- ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறிய வாயு கசிவினால் தூத்துக்குடி நகர மக்களுக்கு இருமல், கண் எரிச்சல் போன்ற பல உடல்நல குறைவுகள் ஏற்பட்டன.
* 29.3.2013- இந்த தொழிற்சாலையை மூடுவதற்கும், மின் இணைப்பை துண்டிப்பதற்கும் ஜெயலலிதா உத்தரவு.
* 2.4.2013- உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, ஸ்டெர்லைட் ஆலை இயங்கலாம் என்று உத்தரவிட்டது.
* 31.5.2013- தேசிய பசுமை தீர்ப்பாயம் முதன்மை அமர்வு முன்பு, ஸ்டெர்லைட் ஆலை தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை விசாரணை செய்து ஆலையை மூடும் உத்தரவை ரத்து செய்து, தொழிற்சாலையை இயங்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்ய ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
* 12.2.2018- ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அதன் அருகிலுள்ள குமரெட்டியாபுரம் கிராம மக்கள் போராட்டத்தை தொடங்கினர்.
* 09.4.2018- தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம், ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கான உரிமத்தை புதுப்பிக்க மறுப்பு.
* 23.5.2018- தூத்துக்குடி பொது மருத்துவமனை முன்பு இறந்தவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம். ஆஸ்பத்திரி அருகே போலீஸ் வேன் தீவைப்பு. தூத்துக்குடியில் மீண்டும் போலீசார் துப்பாக்கிசூடு. மேலும் ஒருவர் உயிரிழப்பு. இதன் மூலம் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு. ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பு துண்டிப்பு.
* 28.5.2018- ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் மாலையில் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.
* 22.6.2018- ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் வழக்கு.
* 15.12.2018- ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவு.
* 2.1.2019- தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு.
* 18.2.2019- தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவை ரத்து செய்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு. #ThoothukudiSterlite
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையால் குடிநீர், காற்று மாசு ஏற்படுவதாக கூறி பல்வேறு கிராம மக்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் போராட்டம் நடந்தது. 100-வது நாள் போராட்டத்தில் கலவரம் வெடித்ததால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 14 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தினர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில் சில நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்தது.
பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனுதாக்கல் செய்யப்பட்டது. இதேபோல் தூத்துக்குடி பேராசிரியை பாத்திமாபாபு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதற்கு மதுரை ஐகோர்ட்டு தற்போதைய நிலையே தொடரவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.
இதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகமும் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது. இந்த அனைத்து மனுக்களும் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ரோகின்டன் பாலி நார்மன், நவீன் சின்கா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது வைகோவும் ஆஜராகி தனது மேல்முறையீட்டு மனுவையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று வாதிட்டார். இந்த அனைத்து மனுக்களையும் விசாரணை செய்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை இல்லை என்று நேற்று தீர்ப்பு கூறினார்கள்.
இதைத்தொடர்ந்து தூத்துக்குடி பகுதியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள தெற்கு வீரபாண்டியபுரம், குமரெட்டியாபுரம், பண்டாரபுரம், மீளவிட்டான் மற்றும் தூத்துக்குடி கலெக்டர் அலுவலக பகுதிகளில் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர்.
ஏற்கனவே தூத்துக்குடியில் பசுபதிபாண்டியன் நினைவு தினத்தை முன்னிட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் முக்கிய பகுதிகளில் போலீசார் ரோந்து சுற்றி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:-
ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக கடந்த 15.12.18 அன்று தேசிய பசுமை தீர்ப்பாயம் ஒரு உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவு வந்தவுடன், முதல்அமைச்சர் இது இறுதி உத்தரவு அல்ல, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று அறிவித்தார். அதன்படி தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவில் உள்ள அனைத்து விவரங்களையும் ஆய்வு செய்து, சட்டப்படி மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்டு உள்ளது. அதன்பேரில் உச்சநீதிமன்றம் எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தர விட்டுள்ளது. மேலும் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் உடனே ஆலையை திறக்க எந்த இடத்திலும் கூறவில்லை. உச்சநீதிமன்றத்தில் சட்ட வல்லுனர்கள் மூலம் வழக்கு நடத்தப்படும்.
இந்த வழக்கு விசாரணை முடியும் வரை இதே நிலை(ஸ்டேட்டஸ் கோ) நீடிக்கும். உடனடியாக ஆலையை திறப்பதற்கான எந்த உத்தரவும் உச்ச நீதிமன்றத்தில் இருந்து வரவில்லை. மதுரை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தாலும், அரசு தொடர்ந்த வழக்கு விசாரணை நடக்கிறது.
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன. அந்த நிபந்தனைகளை ஆலை நிர்வாகம் சரி செய்த பிறகு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன்பிறகு மாசுகட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்யும். தற்போது எந்தவிதமான முடிவும் எடுக்கவில்லை. நிபந்தனைகளை ஸ்டெர்லைட் நிர்வாகம் நிறைவேற்றியதாகவும் தெரியவில்லை.
நாங்கள் சட்டரீதியாக தொடர்ந்து போராடி வருகிறோம். ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது என்பது அரசின் முடிவு ஆகும். சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார். #sterliteissue #supremecourt
செஞ்சி:
விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், செஞ்சி தொகுதி எம்.எல்.ஏ.வுமான செஞ்சி மஸ்தான் மகன் திருமண வரவேற்பு விழா இன்று காலை செஞ்சியில் உள்ள அல்ஹிலால் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
செஞ்சி மஸ்தான் இல்ல திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இது திருமண வரவேற்பு விழாவா? அல்லது மாநாடா? என்று தெரியவில்லை. அந்தளவுக்கு மக்கள் கூடியுள்ளீர்கள்.
கஜா புயலால் திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சை உள்பட 8 மாவட்டங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டன. இதுவரை பிரதமர் மோடி கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க வரவில்லை. இதுவே மகாராஷ்டிரம், குஜராத் மாநிலங்களில் நடந்திருந்தால் மோடி வருத்தம் தெரிவிக்கிறார், அனுதாபம் தெரிவிக்கிறார். ஏன் வெளிநாடுகளில் அசம்பாவிதம் நடந்தால் கூட அனுதாபம் தெரிவித்து செய்தி வெளியிடுகிறார். ஆனால், தமிழ்நாட்டில் விவசாயம் அழிந்து வருகிறது. கஜா புயல் 8 மாவட்டங்களை பெருமளவில் சூறையாடி உள்ளது. இதற்கு பிரதமர் வருத்தம் தெரிவிக்கவில்லை.
தமிழக அரசு 14 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசிடம் நிதி கேட்டது. ஆனால், 300 கோடி ரூபாயை மட்டுமே மத்திய அரசு தந்துள்ளது. இதுவும் நிவாரண தொகையாக தரவில்லை. மத்திய அரசிடம் இருந்து மாநில அரசுக்கு வழக்கம்போல் கொடுக்கப்படும் நிதியாக கொடுக்கப்பட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது.
கலைஞர் சிலை திறப்பு விழாவின்போது மோடியை நான் ‘சேடிஸ்ட்’ என்று கூறியதாக பல்வேறு விமர்சனங்கள் வந்துள்ளது. நான் தனிப்பட்ட மோடியை விமர்சிக்கவில்லை. அவர் பிரதமராக இருக்கிறார் என்றதால் அவரை சேடிஸ்ட் என்று கூறினேன். இதில் என்ன தவறு? ஒருமுறை அல்ல, பலமுறை அவரை ‘சேடிஸ்ட்’... ‘சேடிஸ்ட்’... என்று கூறினாலும் அதுமிகையாகாது.
நாட்டில் மாற்றம் தேவை என கருதி ராகுலை பிரதமராக முன்மொழிந்தேன். அதில் என்ன தவறு? கலைஞர் இந்திராகாந்தியை அழைத்து நிலையான ஆட்சி தரவேண்டும் என்றார். அதன் பின்னர் சோனியாகாந்தியை அழைத்து நல்லாட்சி தரவேண்டும் என்றார். அதன் வரிசையிலேயே தற்போது நான் ராகுலை அழைத்து நல்லாட்சி தர வேண்டும் என்று முன்மொழிந்துள்ளேன். நான் ராகுலை முன்மொழிந்தது தவறு என்று யாரும் கூறவில்லை. மோடிக்கு எதிராக நல்லகூட்டணி அமைத்த பின்பு அறிவிக்கலாம் என்று இருந்தனர்.
இனி மத்தியிலும், மாநிலத்திலும் ஆள முடியாத இருகட்சிகளும் தி.மு.க.வை விமர்சிப்பது வியப்பாக உள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் பலியானார்கள். அதில் 12 பேரின் தலையிலும், மார்பிலும் குண்டு பாய்ந்துள்ளது. இதில் போலீசார் விதிமுறைகளை மீறி குறிபார்த்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
இதற்காக நான் அன்றே சொன்னேன். சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று. ஆனால், தற்போதுள்ள எடப்பாடி ஆட்சி உச்சநீதிமன்றம் வரை சென்று சி.பி.ஐ. விசாரணை வேண்டாம் என்று வலியுறுத்தியது. ஆனால், அதையும் மீறி சி.பி.ஐ. விசாரணை தற்போது நடந்து வருகிறது. எனவே, மத்தியிலும், தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் தேவை என்று தமிழக மக்கள் தயாராகி விட்டனர். தமிழகத்தில் பாரதிய ஜனதா தலைதூக்க முடியாது. அதுபோல இந்தியாவிலும் பாரதிய ஜனதாவை தூக்கி எறிவோம். தமிழக அரசு மத்திய அரசிடம் மண்டியிட்டு கிடக்கிறது.
இனிவரும் பாராளுமன்ற தேர்தலாக இருக்கட்டும், சட்டமன்ற தேர்தலாக இருக்கட்டும், உள்ளாட்சி தேர்தலாக இருக்கட்டும் அதில் தி.மு.க.வே வெற்றி பெற சபதம் ஏற்போம்.
இவ்வாறு அவர் பேசினார். #mkstalin #rahulgandhi #pmmodi
கோவை:
கோவையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-
ஸ்டெர்லைட் ஆலையை தமிழக முதல் -அமைச்சர் பெரிய பூட்டு போட்டு பூட்டினார். இதன் மீது ஆலை உரிமையாளர் மேல் முறையீடு செய்ததால் ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது.
இது தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்வோம் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க எந்த முகாந்திரமும், சாத்திய கூறும் கிடையாது.
கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசு நிவாரண பணிகளை தீவிரமாக செய்தது. 100 சதவீத மின் வினியோகம் வழங்கப்பட்டு விட்டது. முற்றிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட ஒரு சில கிராமங்களில் இன்னும் மின்சாரம் கிடைக்காமல் இருந்தால் விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கஜா புயலால் வீடு இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் முதல்-அமைச்சர் உத்தரவை மீறி அதிகாரிகள் செயல்பட வாய்ப்பு இல்லை. இழப்பீடு வழங்குவதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை.
எந்த திட்டம் அறிவித்தாலும் ஊழல் குற்றம் சாட்டுவது தற்போது பேஷனாகி வருகிறது. அரசு மீது சிலர் குற்றம் சுமத்தி வருகிறார்கள். அவர்கள் மாற்று கட்சியினராக தான் இருப்பார்கள்.
குட்கா வழக்கு விசாரணையில் உள்ளது. அதில் சொல்ல ஒன்றும் இல்லை. இந்த வழக்கில் அரசு தலையீடு கிடையாது. அ.தி.மு.க.வில் இருப்பவர்கள் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா தலைமையை ஏற்று செயல்படுபவர்கள் வேறு கட்சிக்கு செல்ல மாட்டார்கள்.
டி.டி.வி. தினகரன் அணியில் இருப்பவர்கள் நொந்து போய் உள்ளனர். இரட்டை இலை எங்கு உள்ளதோ அது தான் உண்மையான அ.தி.மு.க. அங்குதான் அ.தி.மு.க. தொண்டர்கள் இருப்பார்கள். பிரிந்து சென்றவர்கள் அ.தி.மு.க.வுக்கு வர விரும்புகிறார்கள்.
கரூரில் செந்தில் பாலாஜி மட்டும் தான் தனிப்பட்ட காரணங்களுக்காக தி.மு.க.வுக்கு சென்று உள்ளார்.ராஜீவ் கொலையாளிகள் 7 பேரை விடுதலை செய்ய கோரி ஏற்கனவே சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கவர்னருக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்.
அப்பாவி மக்கள் யாராக இருந்தாலும் அவர்கள் விடுதலைக்காக அ.தி.மு.க. போராடி வருகிறது. ஆனால் சில பிரச்சினைகளை வைத்து அரசியல் விளையாட்டு நடக்கிறது.
ராஜீவ் கொலையாளிகள் 7 பேர் விஷயத்தில் அவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள். சுதந்திர காற்றை அனுபவிப்பார்கள்.
தி.மு.க.வுக்கு தேர்தல் பயம் வந்து விட்டது. இதனால் தான் தேர்தல் தேதி அறிவிக்கும் முன் கூட்டணி அமைக்கிறார்கள். எங்களுக்கு மடியில் கனம் இல்லை. அதனால் பயம் இல்லை. பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவித்தவுடன் அ.தி.மு.க. மெகா கூட்டணி அமைக்கும். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் வியூகம் அமைத்து வெற்றி கூட்டணி அமைப்பார்.
இவ்வாறு அவர் கூறினார். #sterliteplant #ministerrajendrabalaji
தூத்துக்குடி:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி கடந்த மே மாதம் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.
ஆலை மூடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து. இதை தொடர்ந்து தேசிய பசுமை தீர்ப்பாயம் சார்பாக அமைக்கப்பட்ட நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழுவினர் ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்தனர்.
இதன்பிறகு சில நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதற்கு தூத்துக்குடி பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்று வலியுறுத்தி பொதுமக்கள் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் மனுக்கள் கொடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பதிலுக்கு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரியும் லாரி அசோசியேசன் உள்ளிட்ட அமைப்புகள், பெண்கள் மனு கொடுத்தனர். இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சட்டமன்றத்தை கூட்டி சிறப்பு தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடி பண்டாரம்பட்டி கிராம மக்கள் இன்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊரின் மையப்பகுதியில் அமர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இது தொடர்பாக போராட்ட குழுவை சேர்ந்த வக்கீல் அரிராகவன் மற்றும் பண்டாரம்பட்டி பகுதி பெண்கள் கூறுகையில்," மேகதாது அணை பிரச்சினையில் தமிழக அரசு சட்டமன்றத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்றுவது போல் ஸ்டெர்லைட் ஆலையை அகற்றவும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுதொடர்பாக ஏற்கனவே அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் எம்.எல்.ஏக்கள், அனைத்து தலைவர்களையும் சந்தித்து மனு கொடுத்துள்ளோம். எனவே தூத்துக்குடி மக்களை பாதுகாக்க தமிழக சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றவேண்டும்" என்றனர். #sterliteplant
தூத்துக்குடி:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே மாதம் 22-ந்தேதி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். இதை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு ஆணை வெளியிட்டது.
தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. இதனிடையே ஆலை மூடப்பட்டதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான பசுமை தீர்ப்பாய குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்தியது.
இதன் தொடர்ச்சியாக ஆலையை சில நிபந்தனைகளுடன் இயக்கலாம் என்று பசுமை தீர்ப்பாயம் கூறியது. இதற்கு அரசியல் கட்சிகள், அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சில அமைப்புகள் பசுமை தீர்ப்பாய உத்தரவின்படி ஆலையை திறக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளன.
இதனிடையே தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தும் ஏராளமானோர் மனு கொடுக்க வந்திருந்தனர். இருதரப்பினரும் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மோதல் ஏதும் ஏற்படாமல் இருக்க தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் இன்று 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஏராளமான போலீசார் நிறுத்தப்பட்டி ருந்தனர். ஸ்டெர்லைட்டுக்கு எதிரான தமிழர் கூட்டமைப்பு சார்பாக வக்கீல் கிருஷ்ண மூர்த்தி, பிரபு, வேல்ராஜ் ஆகியோர் தலைமையில் ஏராளமானோர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
அப்போது அவர்கள் கூறும் போது, ‘தூத்துக் குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக போலீசார் செயல்படுகிறார்கள். ஸ்டெர்லைட் ஆலையை அகற்றும் வரை அறவழியில் போராடுவோம். தமிழக அரசு உடனடியாக சட்ட மன்றத்தை கூட்டி ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்’ என்றார்கள். தொடர்ந்து அவர்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கோஷம் எழுப்பியபடி ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.
தூத்துக்குடி அருகே உள்ள பண்டாரம்பட்டி கிராம மக்கள் ஏராளமானோர் திரண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மனு கொடுத்தனர். அப்போது அவர்கள் ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்று கூறி முகத்தில் கவசம் அணிந்து வந்தார்கள்.
பின்னர் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினார்கள். அப்போது அங்கு திரண்டு நின்ற பெண்கள் கூறுகையில், ‘பசுமை தீர்ப்பாய உத்தரவு பொதுமக்களுக்கு எதிராக அமைந்துள்ளது. அரசு வேதாந்தா குழுமத்திற்கு ஆதரவாக செயல்படுகிறது. மக்களை பாதிக்கும் இந்த ஆலையை உடனடியாக அகற்ற வேண்டும்’ என்றனர்.
போராட்டக்குழுவை சேர்ந்த வக்கீல் அரிராகவன் தலைமையில் பொதுமக்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தார்கள். அப்போது அவர்கள் கூறுகையில், ‘தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், பசுமை தீர்ப்பாயத்தை கண்டித்தும் வருகிற 5-ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கேட்டு கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம். இதற்கு அனுமதி கிடைக்காத பட்சத்தில் உயர்நீதிமன்ற அனுமதியை பெற்று உண்ணாவிரதம் நடத்தப்படும்’ என்றனர். #Sterliteplant #tuticorincollectoroffice
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் 22-ந் தேதி பொது மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள்.
இதைத்தொடர்ந்து கடந்த மே மாதம் 28-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்பேரில் ஆலை மூடி ‘சீல்’ வைக்கப்பட்டது. துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் மாநில, தேசிய மனித உரிமை ஆணையமும் விசாரணை நடத்தி வருகிறது.
துப்பாக்கி சூடு தொடர்பான வழக்குகளை முதலில் போலீசாரும், பின்னர் சி.பி.சி.ஐ.டி போலீசாரும் விசாரணை நடத்தினார்கள். இதையடுத்து இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இதனிடையே ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து ஆலை தரப்பில் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக ஓய்வு பெற்ற மேகாலயா ஐகோர்ட்டு நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் 3 பேர் குழுவை அமைத்தது.
இந்த குழுவினர் கடந்த செப்டம்பர் மாதம் 22, 23-ந் தேதிகளில் தூத்துக்குடிக்கு வந்து ஆய்வு செய்தனர். பொதுமக்களிடம் இருந்தும் மனுக்களை பெற்றனர். பின்னர் சென்னையிலும் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக பல்வேறு தரப்பினரையும் சந்தித்து மனுக்கள் பெற்றனர்.
மூன்று நாட்களுக்கு முன்பு அந்த குழுவினர் தங்களது ஆய்வு அறிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை செயல்பட அனுமதி தரலாம். ஆலையை மூடியது நீதிக்கு எதிரானது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்த குழுவின் இந்த அறிக்கை தூத்துக்குடி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு கருத்துக்களை கூறியுள்ளனர்.
தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த ஆய்வுக்குழு அறிவியல் பூர்வமாகவோ, கள ஆய்வையோ முழுமையாக மேற்கொள்ளவில்லை. இதனால் ஆலைக்கு சார்பாக அறிக்கை தாக்கல் செய்து உள்ளனர். இந்த அறிக்கை வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவது போன்று உள்ளது. இந்த அறிக்கை தூத்துக்குடி மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. இதனை ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமும், அரசும் செய்த கூட்டு சதியாகவே பார்க்கிறோம். ஆலையை நிரந்தரமாக அகற்றும் வரை போராட்டம் தொடரும்.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தை சேர்ந்த வக்கீல் அதிசயகுமார்:
ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் ஆலையை மூட வேண்டும் என்ற ஒருமித்த கருத்தில் உள்ளனர். இந்த நிலையில் மக்களுக்கு எதிரான ஒரு பரிந்துரையை குழு சமர்ப்பித்து உள்ளது. ஆகையால் தமிழக அரசு உடனடியாக சட்டமன்றத்தை கூட்ட வேண்டும். நிரந்தரமாக ஆலையை மூடுவதற்கான வழிமுறையை திட்டமிட்டு அவசர சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்’ என்றார்.
நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு:
ஸ்டெர்லைட் ஆலையை மூடியபோதே முன்னாள் நீதியரசர் ஹரிபரந்தாமன், சந்துரு போன்றோர் அரசாணையில் ஓட்டை உள்ளது. நீதி துறையில் செல்லாது என எச்சரிக்கை மணி அடித்தனர். மக்களும் வலியுறுத்தினார்கள். தமிழக முதல்வர், தூத்துக்குடி கலெக்டர் மற்றும் அமைச்சர்கள் நீதிமன்றமே உத்தரவிட்டாலும் ஸ்டெர்லைட்டை திறக்க மாட்டோம் என்று கூறினார்கள்.
ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி சுற்றுச்சூழல் மாசுபட்டுள்ளதா? நீர் கெட்டுள்ளதா? கடல் வளம் பாதிக்கப்பட்டுள்ளதா? காற்று மாசுபட்டுள்ளதா? என்பதை பற்றி ஆய்வு செய்யவே நீதியரசர் தருண் அகர்வால் தலைமையிலான குழுவை பசுமை தீர்ப்பாயம் அளித்தது.
ஆனால் அந்த குழு ஆலையை திறக்க பரிந்துரைப்பதாக கூறுவதற்கு உரிமை இல்லை. வேதாந்தா குழுமத்திற்கு ஆதரவாக தருண் அகர்வால் குழு வரம்புமீறி செயல்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அரசு 7 நாட்களுக்குள் அறிக்கை அனுப்ப வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
எனவே தமிழக அரசு உடனடியாக சட்டமன்றத்தை கூட்டி ஜல்லிக்கட்டுக்கு சிறப்பு சட்டம் இயற்றியது போல ஸ்டெர்லைட் ஆலையை மூட சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். அவ்வாறு செய் ல் அரசின் கொள்கை முடிவு என்று நீதித்துறை தலையிடாது.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தை சேர்ந்த தமிழ் மாந்தன்:
தேசிய பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக உள்ளது. ஆய்வு செய்ய வந்த குழு மக்களிடம் மனுக்கள் வாங்கினார்கள். இந்த விஷயத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தி இருக்க வேண்டும். பசுமை தீர்ப்பாயம் இப்படித்தான் உத்தரவிடும் என எங்களுக்கு தெரியும்.
ஆலையை ஆய்வு செய்ய வந்த குழுவும் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாகத்தான் உள்ளது. அந்த குழு மீதும் பசுமை தீர்ப்பாயம் மீதும் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே பசுமை தீர்ப்பாயத்தை கண்டித்தும் விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார். #SterlitePlant #SterliteProtest
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே மாதம் 22-ந்தேதி நடந்த போராட்டத்தின் போது போலீசார் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். 99 போலீசாரும், நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களும் காயம் அடைந்தனர்.
இது தொடர்பாக சிப்காட், தென்பாகம், வடபாகம், முத்தையாபுரம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு தமிழக அரசு மாற்றியது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் தூத்துக்குடியில் முகாமிட்டு விசாரணையை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டு கடந்த ஆகஸ்டு மாதம் 14-ந் தேதி ஐகோர்ட்டு ஆணை பிறப்பித்தது.
இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு தொடர்பான ஆவணங்களை கடந்த 8-ந்தேதி சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதன்பேரில் சென்னை சி.பி.ஐ. சிறப்பு குற்றப்புலனாய்வு பிரிவு துணை சூப்பிரண்டு ரவி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்தார். சி.பி.ஐ. சூப்பிரண்டு சரவணன் மேற்பார்வையில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கொலை முயற்சி, கொலை மிரட்டல், அரசு ஊழியர்களை பணிசெய்யவிடாமல் தடுத்தல், பயங்கர ஆயுதங்களை வைத்து தாக்குதல், சந்தேக மரணங்கள் உள்ளிட்ட 13 சட்டப்பிரிவுகளின் கீழ் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
சி.பி.ஐ. அதிகாரிகள் தற்போது சேகரிக்கப்பட்ட ஆவணங்களுடன் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஒப்படைத்த ஆவணங்களை ஒப்பிட்டு பார்த்தனர். இதைத் தொடர்ந்து இன்று 2-வது நாளாக சி.பி.ஐ. அதிகாரிகள் தங்கள் விசாரணையை தொடங்கினர்.
அப்போது தூத்துக்குடி சிப்காட் போலீஸ் நிலையம், தென்பாகம், வடபாகம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அடுத்தக் கட்ட நடவடிக்கையில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. #ThoothukudiFiring #CBI
மே 17 இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் திருமுருகன் காந்தி. இவர் மீது சென்னையில் தேச துரோக வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதில் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டார். குண்டர் சட்டத்திலும் அவர் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் ஸ்டெர்லைட் போராட்ட வழக்கில் தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்த நேற்று திருமுருகன்காந்தி சென்னை புழல் சிறையில் இருந்து பாளை மத்திய சிறைக்கு அழைத்து வரப்பட்டார். நள்ளிரவு 1 மணியளவில் திருமுருகன் காந்தி வந்த வேன் பாளை சிறையை வந்தடைந்தது.
பின்பு பாளை சிறையில் அடைக்கப்பட்ட திருமுருகன் காந்தி இன்று காலை பலத்த பாதுகாப்புடன் தூத்துக்குடி அழைத்து செல்லப்பட்டார்.
தூத்துக்குடியில் கடந்த மார்ச் மாதம் தடையை மீறி ஸ்டெர்லைட்டுக்கு எதிராக பேசியபோது அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தூத்துக்குடி 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் திருமுருகன் காந்தி நீதிபதி தமிழ்செல்வி முன்னிலையில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவருக்கு நீதிபதி தமிழ் செல்வி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இதனிடையே மற்ற வழக்குகளில் திருமுருகன் காந்திக்கு ஜாமீன் கிடைக்காததால் அவர் மீண்டும் சிறையில் அடைக்க அழைத்து செல்லப்பட்டார். திருமுருகன் காந்தி ஆஜர்படுத்தப்பட்டதையொட்டி தூத்துக்குடி கோர்ட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. #Sterlite #ThirumuruganGandhi
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்